Wednesday, 2 August 2017



 வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு துவாபர யுகத்தின் முடிவிலும் ஒரு வேதவியாசர் தோன்றி வேதத்தை நான்கு பகுதிகளாகப் பகுப்பார். ஒவ்வொரு வேதமும் நான்கு பகுப்புகளைக் கொண்டது. நான்கு வேதங்கள்:- ரிக், சாம, யஜுர், அதர்வண. நான்கு பகுப்புகள்:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

வேதங்களும் மற்ற மதநூல்களும் ஒன்றா?
வேதங்களை மற்ற மதங்களின் மதநூல்களோடு ஒப்பிடுவது அறியாமை ஆகும். வேதங்கள் வெறும் அதை செய்யவேண்டும்; இதை செய்யக்கூடாது எனவும், இதை செய்தால் நரகம்; அதை செய்தால் சொர்க்கம் என்றும் பேசவில்லை. மாறாக வேதங்கள் மிக ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய கருத்துகளை எல்லாம் நமக்கு அளிக்கின்றன. வேதங்கள் எந்த மதகுருவையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்டவையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. ’அபௌருஷேயம்’ காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு.
முதலாவது வேதமான ரிக் வேதம் மிக முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு.

ரிக் வேதம்
பல நூறு ரிஷிகளால் உணரப்பட்ட மிக அரிய மந்திரங்களையும், ஆழ்ந்த தத்துவங்களையும் கொண்டுள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான நூல் ரிக்வேதம். இந்த வேதம் தான் இந்துதர்மத்தின் ஆணிவேர். ரிக்வேதத்தின் வானவியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், இந்துதர்ம யோகிகளும் ரிக்வேதத்தை 12,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அது காலவரையற்றது. எப்போதும் இருந்தது. அதை ரிஷிகள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் உணர்ந்துள்ளனர். ரிக்வேதம் இறைதுதிகளை உள்ளடக்கியது. ’ரிக்’ என்றால் போற்றுதல் எனப் பொருள்படும். ரிக்வேதத்தில் 33 தெய்வங்களைப் (11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 8 வசுக்கள், 2 அஸ்வின்கள்) போற்றி பாடல்கள் உள்ளன. இவர்களே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் ஆவர். வேதஞானம் இல்லாதவர்கள் 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் என்பதை 33 கோடி தெய்வங்கள் எனக் கருதி இந்துதர்மத்தைப் பற்றி பொய்யான பிரச்சாரம் செய்கிறார்கள். ரிக்வேதத்தின் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சக்திவாய்ந்த முறையில், ஒலியியல் ஞானம் பொருந்திய வகையில் உள்ளன. ரிக்வேதம் 10 மண்டலங்களை உடையது. 1028 மந்திரங்களும், 10,600 வரிகளையும் உடையது. ரிக்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும், இந்துதர்ம நூல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேதங்களுக்கெல்லாம் வேதமாக ரிக்வேதம், அழிவற்ற பேரறிவு பெட்டகமாக அமைந்துள்ளது.

சாம வேதம்
சாம வேதத்தை (The Veda of Song) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அதாவது பாடல் வேதம். ரிக்வேத மந்திரங்களை எல்லாம் பாடல் வடிவில் வடிவமைத்துக் காட்டும் வேதம் இது. சாமவேதத்தின் மறைபொருள் அதன் இனிமையான இசைவடிவில் ஒளிந்துள்ளது. ”ரிக்வேதம் சொல் என்றால், சாமவேதம் பாடல். ரிக்வேதம் மெய்ஞானம் என்றால், சாமவேதம் மெய்யுணர்வு. ரிக்வேதம் மனைவி என்றால், சாமவேதம் கணவன்.” என உபநிடதம் குறிக்கின்றது. சாமவேதம் ஆன்மீக அறிவையும் பக்தியின் வலிமையும் பற்றி கூறுகின்றது.

யஜுர் வேதம்
யஜுர் வேதம் சடங்குகளின் வேதம் என கூறப்படுகின்றது. பல்வேறு சடங்குகளைப் பற்றிய அறிவுரைகளை இந்த வேதம் நமக்கு அளிக்கின்றது. உள்ளுணர்வுகளை தட்டியெழுப்பவும், மனத்தை பரிசுத்தமாக்கவும் தேவையான வழிகளை இந்த வேதம் மிக துல்லியமாக வரையறுத்துக் காட்டுகின்றது. யஜுர்வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் ரிக்வேத தெய்வங்கள் ஆவர். பல்வேறு வகையான வேள்விகளையும் அதன் செயல்முறைகளையும் யஜுர்வேதம் விளக்குகின்றது. வேள்விகள் செய்யப்படுவது தெய்வங்களுக்காக எனவும், வேள்விகளில் உயர்ந்தது ஆன்மவேள்வியே (ஆத்மயக்ஞம்) என்றும் கூறப்படுகின்றது. நெஞ்சகத்திலே தீமூட்டி ஞானம் எனும் வேள்வியை வளர்த்து, அகங்காரத்தை அதிலிட்டு, மெய்யுணர்வு எனும் அமுதைப் பெறுவதே ஆன்மவேள்வி எனக் கூறப்படுகின்றது.

அதர்வண வேதம்
இதுவே நான்காவது வேதமாகும். ரிக்வேத மந்திரங்களில் பலவற்றை அதர்வண வேதம் கொண்டுள்ளது. மேலும், சில தாந்திரீக மந்திரங்களையும், தடையிற்குட்பட்ட சடங்காராய்ச்சிகளையும் உடைய வேதம் இது. அணுகுண்டை தவறான செயல்களுக்கு உபயோகிப்பதால் அதை சில நாடுகளில் தடை செய்துள்ளனர். அதேபோல், அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் சில சடங்குகளை தவறான நோக்கத்தில் உபயோகிக்க கூடாது என்பதற்காக அவற்றை தடை செய்து விட்டனர். ஆனாலும் அதர்வண வேதத்தில் அடங்கியிருக்கும் தந்திரங்களை முந்தைய முனிவர்கள் பின்பற்றி பல நன்மைகளைச் செய்துள்ளனர். இராவணன் நான்குவேதங்களையும் கரைத்துக் குடித்த பிராமணன் ஆவான். அவன் அதர்வண வேத ஞானத்தை தவறான நோக்கத்தில் உபயோகித்தான். அதனால் அவனுக்கு அவனே அழிவைத் தேடிக் கொண்டான். அதர்வண வேதத்தை நெருப்புடன் ஒப்பிடலாம். நெருப்பை நன்மையாக பயன்படுத்தினால் சமைக்கலாம், குளிர் காயலாம். அதே தவறாக உபயோகித்தால் ஒரு வீட்டையே கொளுத்தலாம்.
வேதத்தின் நான்கு பிரிவுகள்
ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம்.

*சம்ஹிதை என்பது தெய்வங்களுக்கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை.

*பிரம்மாணம் என்பது யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது.

*ஆரண்யகம் என்பது தியானம், தவம் போன்றவற்றின் மேற்கோளாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

*உபநிடதம் வேதத்தின் இறுதிப் பகுதியாகும். இவை ’வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகவும் புகழ்ப்பெற்றவையாகவும், இந்துதர்மத்தின் மிக உயரிய உண்மைகளின் உறைவிடமாகவும் விளங்குகின்றன. இவை தத்துவ ஆராய்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும் பகுதிகள் ஆகும்.

நான்கு பிரிவுகள் – நான்கு வகைகள்
வேதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. 
பிரம்மச்சரிய (மாணவன்) நிலைக்கு சம்ஹிதைகள், 
கிரஹஸ்தம் (இல்லறத்தான்) நிலைக்கு பிரமாணம், 
வனப்பிரஸ்தம் (தவம் புரிபவன்) நிலைக்கு ஆரண்யகம், 
சன்னியாசம் (துறவி) நிலைக்கு உபநிடதம்.

வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம். 
சம்ஹிதையும் பிரமாணமும் - கர்ம காண்டங்கள் அல்லது சமய சடங்குகள் பற்றியவை. ஆரணயகம் - உபாசனைக் காண்டம் அல்லது தியானத்திற்குரியவை. 
உபநிடதம் - ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி.


Thursday, 13 July 2017

என்ன கேள்வி கேட்கிரோம்ன்னு யோசிச்சு கேளுங்க,,,,,,,,,,,,,,,
பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ''ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர்.
'கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான். உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, ''இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.
திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.
துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.
ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள்.
துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.
அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.
''அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

 வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நா...